கேரளா, மகாராஷ்டிராவில் பரவுவது உருமாறிய கொரோனா வைரசா? ஆய்வு செய்ய எய்ம்ஸ் தலைவர் வேண்டுகோள்

கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது பரவுவது உருமாறிய கொரோனா வைரசா என ஆய்வு செய்ய வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.சமீப காலமாக இந்தியா முழுவதும் கொரோனா பரவும் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,510 பேருக்கு நோய் பரவியது. ஆனால் இதில் பாதிக்கு மேல் நோயாளிகள் கேரளாவில் உள்ளனர். கேரளாவில் இன்று 5,980 பேருக்கு நோய் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாகக் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவிலும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 71 சதவீதம் இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கு மேல் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கடந்த வாரத்தில் இந்தியாவில் 80,536 பேருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 56,932 பேர் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் 39,260 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியது: தற்போது இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் நிலைமை இன்னும் கட்டுக்குள் வராமல் இருக்கிறது. இந்த இரு மாநிலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இது சற்று கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த இரு மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இது தான் காரணமா என உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>