சொத்துக்காக மனைவியுடன் சேர்ந்து தாயை கொன்ற மகன் தற்கொலை செய்ததாக நாடகம்
10 சென்ட் நிலத்திற்காக மனைவியுடன் சேர்ந்து தாயை கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாயைக் கொன்ற பின்னர் மகனும், அவரது மனைவியும் சேர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினர். ஆனால் போலீசார் இருவரையும் பின்னர் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சவரா என்ற இடத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி தேவகி (75). இவருக்கு ராஜேஷ் (42) என்ற மகனும், சசிகலா (46) என்ற மகளும் உள்ளனர்.
ராமச்சந்திரன் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தேவகி தன்னுடைய மகன் ராஜேஷின் குடும்பத்துடன் வசித்து வந்தார். தேவகியின் பெயரில் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதித் தருமாறு தன்னுடைய தாயிடம் ராஜேஷ் கேட்டுள்ளார். ஆனால் அதற்குத் தேவகி மறுத்து வந்துள்ளார். இது ராஜேஷுக்கும் அவரது மனைவிக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் சேர்ந்து தேவகியை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடைய மகனும், மருமகளும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவது குறித்து தேவகி பக்கத்து வீட்டினரிடம் கூறினார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தேவகி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ராஜேஷ் தன்னுடைய தங்கை சசிகலா மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து கூறியுள்ளார்.ஆனால் தேவகியின் மகள் சசிகலா அதை நம்பவில்லை. தன்னுடைய தாயின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவர் கொல்லம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய தாய் தேவகி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும், தம்பி ராஜேஷ் தான் கொலை செய்திருப்பார் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தேவகியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அவர் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷிடமும், அவரது மனைவியிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போதும் தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாகவே ராஜேஷ் கூறினார். ஆனால் பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். 10 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயரில் எழுதித் தராததால் மனைவியுடன் சேர்ந்து தாய் தேவகியை கழுத்தை நெறித்துக் கொன்றதாக ராஜேஷ் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.