காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக் குத்து! - இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அயனாவரம் சோலை தெருவைச் சேர்ந்தவர் சாலமோன் ராஜா. எலக்ட்ரீசியனான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி எழும்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக சாலமோன் ராஜா, கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், கல்லூரிக்கு வரும் மாணவியிடம் தினமும் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு பேசுவதை சாலமோன் ராஜா வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், தொடர்ந்து அந்த மாணவி அவரை நிராகரித்து வந்துள்ளார்.
செவ்வாயன்று மதியம் 12.30 மணி அளவில் அயனாவரத்தில் உள்ள நூர் ஓட்டல் அருகில் வைத்து சாலமோன் ராஜா, மாணவியை வழிமறித்தார். அப்போது தன்னை காதலிக்கச் சொல்லி சாலமோன் ராஜா வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சாலமோன், மாணவியை கத்தியால் குத்தினார்.
இதில் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் அவர் வீடு திரும்பினார். இதற்கிடையே தப்பி ஓட முயன்ற சாலமோன் ராஜாவை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சாலமோன் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com