கேரளாவில் இருந்து செல்பவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மகாராஷ்டிரா அரசு உத்தரவு

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும்.இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் தற்போது நோய் பரவல் அதிகளவில் இருக்கிறது. தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் பேர் இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு வரை அதிகமாக இருந்த மகாராஷ்டிர மாநிலத்தை விட தற்போது கேரளாவில் தான் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் கூடுதலாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை விட அதிகமாக உள்ளது.நேற்று மட்டும் 5,980 பேருக்கு நோய் பரவியது. 19 பேர் மரணமடைந்தனர். மற்ற மாநிலங்களில் நோய் கட்டுக்குள் வந்து விட்ட நிலையில் கேரளாவில் நோய் பரவல் அதிகரித்து வருவது மத்திய சுகாதாரத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் நோய் கட்டுக்குள் வராமல் இருப்பதால் இந்த இரு மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என்பதைக் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில் கேரளாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் செல்லும் பயணிகளுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி கேரளாவில் இருந்து வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் கேரளாவில் இருந்து வருபவர்கள் 72 மணிநேரத்திற்குள் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவு இருக்க வேண்டும். பரிசோதனை நடத்தாமல் சென்றால் விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். இதற்கான செலவைப் பயணிகள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ரெயில்களில் செல்பவர்கள் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு சான்றிதழை வைத்திருக்க வேண்டும். பரிசோதனை நடத்தாமல் செல்பவர்களுக்கு அந்தந்த ரெயில் நிலையங்களில் வைத்து பரிசோதனை நடத்தப்படுவார்கள். நோய் அறிகுறி இருந்தால் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்படும். அதில் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதற்கான செலவைப் பயணிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும். சாலை வழியாகச் செல்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறு மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>