மியான்மர் ராணுவத் தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை..
மியான்மர் நாட்டில் ஜனநாயக அரசை பதவியேற்க விடாமல் ராணுவ நெருக்கடியை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து, அந்நாட்டு ராணுவத் தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.மியான்மர் நாட்டில் நீண்ட காலமாக ராணுவம்தான் ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. பின்னர், பல ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூத்த பெண் தலைவர் ஆங்சான் சூயி விடுவிக்கப்பட்டு, தேர்தலும் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதில், மொத்தமுள்ள 642 இடங்களுக்கு ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.
அந்நாட்டில் நாடாளுமன்றத்திலும் ராணுவத்தின் பிரதிநிதிகள்தான் அதிகமாக இருப்பார்கள். இந்த முறை ஆங்சான் சூயி கூட்டணியினர் அதிகமாக வென்றுள்ளனர். இதையடுத்து, ராணுவம் அந்நாட்டு அரசு நிர்வாகத்தை திடீரென கையில் எடுத்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதுடன், ஆங்சான் சூயி உள்படப் பல தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மியான்மர் ராணுவப் புரட்சியை அமெரிக்காவின் புதிய அரசு கண்டித்திருந்தது. தற்போது மியான்மர் ராணுவத் தளபதிகளின் மீது அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பொருளாதாரத் தடை விதிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள மியான்மர் ராணுவத் தளபதிகளின் நூறு கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்படுகிறது. எதிர்காலத்தில் சுகாதாரத் துறை தவிர மற்ற துறைகளில் ஏற்றுமதி தடை விதிக்கப்படும் என்று அந்த தடையுத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.