ஈரோடு: விசைத்தறி கூடங்கள் 11 நாட்கள் மூடல்
ரேயான் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் இன்று முதல் 11 நாட்கள்விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜவுளி துறையின் மூலப்பொருளான ரேயான் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இதனால் பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறி ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் இன்று முதல் 21ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.இதன் காரணமாக ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம், விசைத்தறிகள் இன்று முதல் இயங்கவில்லை.
கடந்த 3 மாதத்திற்கு முன் ஒரு கிலோ 150க்கு விற்கப்பட்ட ரேயான் நூல் தற்போது 230 ரூபாயாக உயர்ந்துள்ளது.நூல் விலை உயர்வுக்கு ஏற்ப துணி விலை உயர்த்தப்படவில்லை. இதனால் உற்பத்தி செய்யப்படும் துணிகளில் ஒரு மீட்டருக்கு ஐந்து ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்படுவதாக விசைத்தறியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.எனவே நூல் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும் உற்பத்தி இழப்பை சரிகட்டவும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.