நள்ளிரவில் கார் கடத்தல்: கிளு கிளு கிட்நாப்பர்ஸ்?
சென்னை கொரட்டூரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு காரை டிரைவருடன் கடத்தியுள்ளது. நள்ளிரவில் நடந்த போலீஸ் வேட்டையில் கடத்தல் கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலின் பின்னே கிளு கிளுப்பான விஷயம் இருக்கிறதா என்பது விசாரணையில் தெரிய வரும்.கடந்த புதன்கிழமை இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தான் திருநெல்வேலியிலிருந்து பேசுவதாகவும் தன்னுடைய பெயர் ரமேஷ் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய காரையும் டிரைவர் ஞானசேகரனையும் விபசார தடுப்பு போலீஸ் என்று கூறி அடையாளம் தெரியாத ஐந்து பேர் கடத்தி செல்வதாகவும் கூறியுள்ளார்.
காரை கடத்தியவர்கள் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், காரில் இருந்த ஜிபிஎஸ் கருவியின் உதவியால் இருப்பிட விவரத்தை (லொகேஷன்) ரமேஷ், காவல்துறைக்கு அனுப்பியுள்ளார். ரமேஷ் கொடுத்த தகவல், எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து கார் இருந்ததாக தெரிந்த இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.
போலீசார் வருவதை கண்ட கும்பல் சிதறி ஓடியுள்ளது. கும்பலில் மூன்றுபேர் ஓடி விட பிரபு (வயது 32), உதயகுமார் (வயது 32) ஆகிய இருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தப்பி ஓடிய கிட்நாப்பர்கள் வாபா (வயது 65), பாபு (வயது 40), சாலோமோன் (வயது 37) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.போலீஸ் விசாரணையின்போது, டிரைவர் ஞானசேகர், தன் முதலாளி ரமேஷ், விபசார புரோக்கர் என்று தெரிவித்துள்ளார். கார் கொரட்டூர் 100 அடி சாலையில் கடத்தப்பட்டதால் பிடிபட்டவர்கள் கொரட்டூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தப்பி ஓடிய வாபாவுக்கும் ரமேஷுக்கும் விரோதம் இருப்பதால் அவரே விபசார தடுப்பு போலீஸ் வேடமிட்டு இந்தக் கடத்தலுக்குத் திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். திருநெல்வேலியிலிருக்கும் ரமேஷையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.