என்னுடன் தான் என் குழந்தை இருப்பாள்- அமெரிக்க செனெட் விதியையே மாற்றிய தாய்!
அமெரிக்க செனெட் சபையின் பெண் உறுப்பினர்கள் இனி தங்கள் கைக்குழந்தைகளையும் சபையில் உடன் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க செனெட் சபையின் உறுப்பினர் டேமி டக்வொர்த் என்பவர் தனது அலுவலகப் பணியில் இருக்கும்போது பிரசவ வலி ஏற்பட்டது. அவர் பணியில் இருக்கும்போதே அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அமெரிக்க செனெட் சபையில் முதன்முறையாக உறுப்பினர் ஒருவர் பணியில் இருக்கும்போதே குழந்தை பெற்றெடுத்தது இதுவே முதல்முறை. இதையடுத்து இன்று செனெட் சபையில் பேசிய டேமி டக்வொர்த் ஒரு தாயின் பணி குறித்தும் ஒரு செனெட் சபை உறுப்பினராக தனது கடமை குறித்தும் பேசினார்.
அவ்வாறு பேசுகையில் டேமி, "எனது அரசியல் பணியின் ஊடே எனது கைக்குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பணி நிர்வாக சூழல் இருப்பது அவசியம். இது பெண்களின் பிரச்னை மட்டுமல்ல. பகுத்தறிவு கொண்ட பொருளாதார பிரச்னை" என அரசியல் நிர்வாகத் தாயின் சூழலை எடுத்துக்கூறினார்.
இதையடுத்து செனெட் சபையின் தலைவர் ராய் கூறுகையில், "குழந்தை வளர்ப்பு என்பதே ஒரு சவால். அதை செனெட் விதிமுறைகள் என்ற பெயரில் அந்தத் தாய்க்கு கூடுதல் சுமையை அளிக்கக்கூடாது" எனக் கூறினார். இதையடுத்து ஒட்டுமொத்த செனெட் சபையும் ஆதரவு தெரிவிக்கவே செனெட் சபை பெண் உறுப்பினர்களின் கைக்குழந்தைகளை இனி சபைக்கே அழைத்துவந்து தாய் பார்த்துக்கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com