கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து ?

நாடு முழுவதும் வீடுகளில் உபயோகப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை சுமார் 29 கோடி குடும்பத்தினர்.பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஆரம்பத்தில் மானியத்தைக் கழித்தே சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது . ஆனால் இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததால் சிலிண்டருக்கான மானியத்தைச் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது.இதன் படி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது .

அதிலும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும். அதற்குமேல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையும் உண்டு. அவ்வப்போது நிலவும் சந்தை விலைக்கு ஏற்ப மானியத்தில் அளவு அதிகரிக்கவோ குறையவோ செய்யும்.எந்த விகிதத்தில் மானியம் என்பது கண்ணுக்குத் தெரியாத வகையில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் வரை 5 மாதங்கள் இந்த மானியம் வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு பெட்ரோலிய பொருட்களுக்கு மானியமாக மத்திய அரசு 40 ஆயிரத்து 915 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது ஆனால் 2021-22ம் ஆண்டிற்கு பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம், 12,995 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச எரிவாயு இணைப்பு சேவையான உஜ்வாலா என்ற திட்டத்தில் இந்த ஆண்டு மேலும் ஒரு கோடி பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 8 கோடி பேருக்கு இந்த திட்டத்தின் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குப் பெருமளவு தொகை செலவிடப்படுவதால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம், ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.

More News >>