கொரோனா தொற்று பாதித்த சூர்யா நிலை அப்டேட்.. தம்பி கார்த்தி புதிய தகவல்..
கொரோனா காலகட்டம் திரையுலகுக்கு ஒரு பேரடியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், நடிகர்கள் விஷால், சரத்குமார், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், ராம்சரன், வருன் தேஜ், இயக்குனர் ராஜமவுலி, நடிகைகள் ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பல நட்சத்திரங்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டனர்.
சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் குணம் அடைந்து திரும்புவேன் என்றார். ரசிகர்களும் திரையுலகினரும் அவர் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று தங்களது பிரார்த்தனையும் வாழ்த்தும் தெரிவித்தனர். சூர்யாவின் உடல்நிலை குறித்து அவரது தம்பியும், நடிகருமான கார்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில்,அண்ணன் சூர்யா தற்போது வீடு திரும்பிவிட்டார். அவர் பாதுகாப்பாக இருக்கிறார். சில நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருப்பார். உங்களது பிரார்த்தனைக்கும் வாழ்த்துக்களுக்கும் எப்படி நன்றி சொன்னாலும் அது போதுமானதாக இருக்காது என்றார். சூர்யா கொரோனா கால கட்டத்தில் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை வீடியோ வெளியிட்டும், இணையதளம் வாயிலாகவும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் தெரிவித்தார். மேலும் சூரரைப் போற்று படத்தை ஒடிடி தளத்துக்கு விற்று வந்த தொகையிலிருந்து குறிப்பிட்ட தொகையை கொரோனா மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கினார். சூர்யா அடுத்து பாண்டி ராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதில் பிரியா அருள் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன் படம், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார். தான் நடித்து ஒடிடி தளத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தை இந்தியில் ரிமேக் செய்து தயாரிக்க உள்ளார் சூர்யா. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்கவும் பேசி வருகிறார்.