3 இசை அமைப்பாளர் இசையில் படமான பாடல்.. இருமுறை நடித்த பிரபலங்கள்..
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் படம் ராதே ஷ்யாம். 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ராதே ஷியாம் பட ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், அது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.இசை என்பது ஒரு திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவதாலும், ராதே ஷியாம் பன்மொழிப்படமாக உருவாகி வரும் காரணத்தாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான இசையமைப்பாளர்களை ராதே ஷியாம் படக் குழு ஒன்று திரட்டியுள்ளது.
இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாகவும், வித்தியாசமாகவும், விருந்து படைக்கும் வகையிலும் இருக்கும்.இப்படத்தின் இந்தி பதிப்பிற்கும், தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் பதிப்பிற்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசை அமைக்கின்றனர். பாடல்கள் வேறாக இருந்தாலும், அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு நடிகர்கள் உட்பட அனைவரும் முழுமையாக ஒத்துழைத்த காரணத்தால், பாடல்கள் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாகப் படமாக்கப்பட்டன. இதனால் பிரபாஸ், பூஜா ஹெக்டே ஒரே பாடலுக்கு இரண்டு முறை நடித்தனர்.
ராதே ஷியாமின் இந்தி பதிப்பிற்கு மிதுன் இரு பாடல்களுக்கும், மனன் பரத்வாஜ் ஒரு பாடலுக்கும் இசை அமைத்துள்ளனர். பிரபல கவிஞர்களான குமார் மற்றும் மனோஜ் முன்தஷிர் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, கிருஷ்ண காந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர்.இப்படம் தவிர பிரபாஸ் சலார், ஆதி புருஷ் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படம் என மேலும் 3 படங்களில் நடிக்கிறார். சலார் பட முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஆதிபுருஷ் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.