மத்திய அரசின் மிரட்டலுக்கு பணிந்தது 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து

கடைசியில் மத்திய அரசின் மிரட்டலுக்கு டுவிட்டர் நிறுவனம் பணிந்தது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதில் 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன.மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. பிரபல பாப் பாடகி ரிஹானா, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா டியூன்பெர்க் உட்படப் பலர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்கள் மூலமும் இந்த போராட்டத்திற்குப் பெருமளவு ஆதரவு குவிந்து வருகிறது.

இந்நிலையில் டுவிட்டரில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் மிகக் குறைந்த கணக்குகளை மட்டுமே டுவிட்டர் நிறுவனம் ரத்து செய்தது. கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. குறிப்பாகப் பத்திரிகை நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கணக்குகளை ரத்து செய்ய முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஏற்கனவே கேட்டுக்கொண்டதின் படி அனைத்து கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகளைக் கைது செய்யவும் தயங்க மாட்டோம் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் செயல்படும் போது இந்திய அரசின் சட்ட திட்டங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவில் கேப்பிட்டல் மாளிகையில் நடந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். இதையடுத்து மத்திய அரசு கேட்டுக் கொண்டதின் படி டுவிட்டர் கணக்குகளை ரத்து செய்ய அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுவரை மத்திய அரசு 1435 கணக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தது. இதில் 1398 கணக்குகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More News >>