ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக கார்கே தேர்வு..
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்கிறார். நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டில் மோடி அரசு பொறுப்பேற்றது முதல் குலாம்நபி ஆசாத் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார். வரும் பிப்.15ம் தேதி அவரது ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் முடிவடைகிறது. பிப்.15ல் அவருடன் மேலும் 3 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. அந்த 4 பேருக்கும் கடந்த 9ம் தேதி ராஜ்யசபாவில் வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, குலாம்நபி ஆசாத்தை வானாளவிய அளவுக்கு புகழ்ந்தார்.
அவர் மனம் உருகி கண்ணீர் சிந்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத்துக்குப் பதிலாக புதிய எதிர்க்கட்சித் தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் தேர்வு செய்திருக்கிறது. இது குறித்து ராஜ்யசபா தலைவர் வெங்கய்யநாயுடுவிடம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தலித் தலைவரான கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஒருவர். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை லோக்சபாவில் காங்கிரஸ் தலைவராக இருந்தார். லோக்சபாவில் காங்கிரசுக்கு 10 சதவீத எம்.பி.க்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.