அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..

சில மாதங்களாக அரசியல் துறவறம் பூண்டிருந்த பாஜக தலைவர்களில் ஒருவரான உமா பாரதி தற்போது துறவறத்தை கைவிட்டு விட்டு மீண்டும் அரசியலில் குதிக்க தயாராகி வருகிறார். இதற்காக அவர் கையில் எடுத்துள்ள முதல் ஆயுதம் பூரண மதுவிலக்கு என்பது தான். அடுத்த மாதம் முதல் மதுவுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். உமா பாரதியின் இந்த முடிவுக்கு ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளது தான் ஹை லைட். உமா பாரதியின் இந்த முடிவு நல்ல விஷயம் தான் என்றாலும் அம்மாநில பாஜகவிற்குள் லேசான புகைச்சலை உண்டு பண்ணியிருக்கிறது. காரணம் தற்போதைய முதல்வரான சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் ஏற்கெனவே முழுமையான போதைப்பொருள் தடுப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அப்படியிருக்க உமா பாரதி இந்த விஷயத்தில் தனி ட்ராக்கில் பயணம் செய்வது ஏன்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அவர் தெரிவிக்கிறார். அதேசமயம் உமாபாரதியின் நடவடிக்கைக்கு ஆதரவான விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக தெளிவுபடுத்தவில்லை போகிறபோக்கில் பொத்தாம் பொதுவாக ஆதரவு என்று சொல்லியிருக்கிறார்கள். கடந்த ஜனவரி 11 ல் மொரேனா என்ற இடத்தில் நடந்த ஒரு விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். தனது அரசியல் மறு பிரவேசம் குறித்து தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த உமா பாரதிக்கு இந்த நிகழ்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அன்று முதல் தீவிர மது எதிர்ப்பு பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டார். தனது பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆனால், அதற்கு ஏனோ நட்டா செவிசாய்க்கவில்ல. இருந்தாலும், உமா பாரதியின் மதுபானத்தை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரம், முதல்வர் சவுகானுக்கு நெருக்கடியை உண்டு பண்ணியிருக்கிறது. வேறு வழியின்று 'மது இல்லா மாநிலம்' என்ற முழக்கத்தை அவரும் முன்வைக்க தொடங்கினார். கத்னி என்ற ஊரில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங், நாங்கள் நமது மாநிலத்தை மதுவற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறோம். பூரண மதுவிலக்கால் மட்டும் இதை செய்து விடமுடியாது. மது அருந்துவோர் ஆதரவும் அவசியம். என்றார். சவுகான் பூரண மதுவிலக்கு என்பதற்கு பதில் ஒட்டுமொத்தமாக போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தை மாநிலம் முழுவதும் நடத்த முடிவு செய்திருக்கிறார். இதன் முதல் நடவடிக்கையாக நர்மதா ஆற்றுக்கு அருகே 5 கி.மீ சுற்றளவில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.

இது ஒருபுறமிருக்க மத்திய பிரதேசத்தின், வணிக வரித்துறை புதிய கலால் வரி கொள்கையின் அடிப்படையில் மாநிலத்தின் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆன்லைன் மூலம் கடைகளை பதிவு செய்யும் முறையை செயல்படுத்த ஏற்கனவே ஒரு திட்டம் தயாராக இருந்தது. ஆனால் இப்போது உமா பாரதியின் மது எதிர்ப்பு பிரச்சாரமும் அதற்கு அம்மாநில காங்கிரஸ் புள்ளிகளின் ஆதரவும் முதல்வருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அந்தத் திட்டத்தை கிடப்பில் போட வைத்திருக்கிறது. மது பானம் மீதான காங்கிரஸ் கட்சியின் இந்த கரிசனம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அரசியல் விளையாட்டு என்று வர்ணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள் . காரணம், தற்போது ஆன்லைன் மதுபான விநியோக முறையை எதிர்க்கும் காங்கிரஸ் சென்ற முறை ஆட்சியில் இருந்த போது இதை அமல்படுத்த துடித்தது. அப்போது அதை கடுமையாக எதிர்ப்பு அரசியல் செய்தது பாஜகதான். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.. என்ற கவுண்டமணியின் டயலாக் தான் ஞாபகம் வருகிறது.

More News >>