சொந்த வீட்டு முன்பும் கார் நிறுத்த கட்டணம்
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகரின் இப்போதைய தலையாய பிரச்சனை கார் பார்க்கிங் தான். கிட்டத்தட்ட நகரின் எல்லா பகுதிகளிலும் கார்களை பார்க்கிங் செய்வது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.கார்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் வீட்டிற்கு குறைந்தபட்சம் இரண்டு கார்கள் என்ற நிலை உருவாகிவிட்டது. பலரும் வீட்டில் ஒரு காரும் வீட்டிற்கு வெளியே தெருவில் ஒரு காருமாக பார்க் செய்கின்றனர்.
கார் பார்க்கிங் இல்லாத வீடுகளிலும் கூட கார் இருப்பதால் அவர்களும் தெருக்களில் , பிளாட்பாரங்களில் வீடுகளுக்கு முன்பு கார் பார்க்கிங் செய்வது சற்று அதிகமாகவே உள்ளது.இது நகரின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுப் பணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது எனவே இதை முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் இனி வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்படும் கார்களுக்கு கட்டணம் வசூலிக்க நகர்ப்புற வளர்ச்சித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி வீடுகளுக்கு முன்பு கார்களை நிறுத்துவதாக இருந்தால் இனி ஆண்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே இனிமேல் காரை வீட்டு முன்பு தெருவில் பார்க் செய்யமுடியும்.இது தொடர்பான திட்டம் 2012ம் ஆண்டே வரையறை செய்யப்பட்டு விட்டது விட்டது. ஆனால் இப்போதுதான் அமலுக்கு வந்துள்ளது.