எங்களிடம் கடிதம் கேட்கும் திரையரங்கு உரிமையாளர்கள் 30 நாள் படத்தை ஓட்டுவோம் என்று கடிதம் தர தயாரா? தயாரிப்பாளர் சங்கம் கேள்வி
புதிய படங்களையோ டிவியில் திரையிடுவது குறித்து தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.படம் ரிலீஸ் ஆகிக் குறிப்பிட்ட நாட்கள் கழித்துத்தான் ஓடிடியில் வெளியிடுவோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தரப்பில் உத்தரவாதம் கேட்கப்படுகிறது. இதேபோல் இத்தனை நாட்கள் படத்தை ஒட்டுவோம் என தியேட்டர் அதிபர்கள் உத்தரவாதம் தரத் தயாரா எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் திருப்பிக் கேட்கப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உஷா ராஜேந்தர் இன்று வெளியிட்ட அறிக்கை:திரையரங்குகளில் படங்களைத் திரையிட வேண்டுமானால் 10 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடியில் ஒளிபரப்பப்படும் என்று உத்தரவாத கடிதம் கொடுக்கப்படவேண்டும் என்கிற திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு Print Contral System அமுலில் இருந்த நேரத்தில், சென்னை உதயம் காம்ப்ளக்ஸில் ஒரு படம் திரையிடப்பட்டால் அந்த படம் வடபழனி ஏரியாவில் இருக்கும் திரையரங்குகளிலோ அல்லது அருகிலுள்ள காசி திரையரங்கிலோ திரையிடப்படமாட்டாது.
ஆனால் மாறிவரும் தற்போதைய சூழலில் அனைத்து திரையரங்கத்திலும் ஒரே படத்தை ஒரே நேரத்தில் சுதந்திரமாகத் திரையிட்டு வசூலைத் திரையரங்க உரிமையாளர்கள் பிரித்துக் கொள்வது போல, தயாரிப்பாளர்களுக்கும் வியாபார சுதந்திரம் உண்டு என்பதைத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். திரையரங்கத்தில் படம் திரையிடப்படும் அதே நாளில் தயாரிப்பாளர் விருப்பப்பட்டால் ஓடிடியில் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம். இதில் தலையிடுவதற்கோ, உத்தரவாத கடிதம் கேட்பதற்கோ எந்த சங்கத்திற்கும் தார்மீக உரிமையில்லை.இத்தனை நாட்கள் கழித்துத்தான் ஓடிடியில் திரைப்படம் வெளியாகும் என்ற உத்தரவாத கடிதம் கேட்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், குறிப்பிட்ட அந்த படத்தை 30 நாட்கள் தொடர்ச்சியாக எங்கள் திரையரங்குகளில் திரையிடுவோம் என்று உத்தரவாத கடிதம் கொடுக்கத் தயாரா ?
திரையரங்க உரிமையாளர்கள் சில படங்களை மூன்றே நாட்களிலும், சில படங்களை ஒரு வாரத்திலும் சில படங்களை இரண்டு வாரங்களிலும் திரையரங்கை விட்டுத் தூக்கி விடுகிறீர்கள். பெரும்பாலான படங்களை இரண்டு வாரங்களுக்கு மேல் திரையிடத் திரையரங்க உரிமையாளர்கள் விரும்புவதில்லை. நிலைமை அப்படி இருக்கத் தயாரிப்பாளர்கள் ஓடிடியில் வெளியிடுவதற்காக ஏன் 30 நாட்கள் காத்திருக்கவேண்டும்? எதற்காக எங்களை 30 நாட்கள் கழுத்துதான் வெளியிட வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறீர்கள்?
ஒரு படத்தைத் திரையரங்கிலிருந்து தூக்க உங்களுக்கு உரிமை இருப்பது போல, ஓடிடியில் தயாரிப்பாளர் விரும்பும் நேரத்தில் திரையிட அவருக்கு உரிமை இல்லையா ?திரையரங்க உரிமையாளர்கள் MS அடிப்படையில் படத்தைத் திரையிடுவதாக இருந்தால் ஓடிடி விஷயத்தில் நிபந்தனை விதிக்கலாம். அதை விடுத்து, சதவீத அடிப்படையில் படத்தைத் திரையிடும் உங்களுக்கு நாங்கள் ஏன் உத்தரவாத கடிதம் கொடுக்க வேண்டும் ?இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என முத்தரப்பும் ஆகியோர் கலந்து பேசி சுமுக முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.