மூணாறை வாட்டும் கடும் குளிர் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக குறைந்தது

சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாற்றில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. கடந்த சில தினங்களாக இங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக குறைந்தது.கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது மூணாறு. மலைப் பிரதேசமான இப்பகுதி கேரளாவின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான தேயிலை, காப்பி, ஏலத் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

கோடை வாசஸ்தலமான இங்குக் கோடைக் காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். வழக்கமாக மூணாறு பகுதியில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் குளிர் இருக்கும். ஆனால் இவ்வருடம் டிசம்பர் மற்றும் ஜனவரி பாதி வரை குளிர் சற்று குறைவாகவே இருந்தது.ஆனால் ஜனவரி மாத பாதிக்குப் பின்னர் மூணாறின் பல்வேறு பகுதிகளில் குளிர் அதிகரிக்கத் தொடங்கியது.

மூணாறு, வட்டவடை, வாழைத் தோட்டம், சிலந்தியாறு, பாம்பாடும் சோலை, கடவரி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. நேற்று இப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக இருந்தது. இந்தக் கடும் குளிர் மேலும் சில நாட்களுக்குத் தொடர்ந்தால் விவசாயப் பயிர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த 5 வருடங்களில் இது போன்ற குளிரைப் பார்த்ததில்லை என்றும், இந்த நிலை இன்னும் சில வாரங்கள் தொடர்ந்தால் இம்முறை கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.

More News >>