கவிதை எழுதிய பிரபல நடிகரின் மகள்... காதலர் தினத்தில் விற்பனை
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் ஆங்கிலத்தில் கவிதை எழுதியுள்ளார். இந்த புத்தகம் ஆன்லைன் வணிக தளமான அமேசானில் காதலர் தினமான 14ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லாலுக்கு பிரணவ் மோகன்லால் என்ற மகளும் விஸ்மயா மோகன்லால் என்ற மகளும் உள்ளனர். பிரணவ் மோகன்லால் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். விஸ்மயாவுக்கு படங்களில் நடிக்க ஆர்வம் இல்லாவிட்டாலும், சினிமாவில் பின்னணியிலிருந்து பணிபுரிய ஆர்வம் உண்டு. மோகன்லால் முதன் முதலாக பரோஸ் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க தீர்மானித்துள்ளார். இந்தப் படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களில் ஒருவராக விஸ்மயாவும் உள்ளார்.
மேலும் கவிதை எழுதுவதிலும் இவருக்கு அபார திறமை இருக்கிறது.இந்நிலையில் விஸ்மயா, தான் எழுதிய கவிதைத் தொகுப்பைப் புத்தகமாக வெளியிடத் தீர்மானித்துள்ளார். 'கிரைன்ஸ் ஆப் ஸ்டார் டஸ்ட்' என்ற இந்த கவிதை நூல் காதலர் தினமான வரும் 14ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஆன்லைன் வணிக தளமான அமேசான் மூலம் இந்த தன்னுடைய கவிதைத் தொகுப்பை விற்பனை செய்ய விஸ்மயா திட்டமிட்டுள்ளார். நடிகர் மோகன்லால் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். புத்தகத்திற்கான லிங்கையும் அதனுடன் இணைத்துள்ளார். பென்குயின் இந்தியா என்ற நிறுவனம் தான் இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறது. கவிதை நூலை வெளியிட உள்ள தன்னுடைய சகோதரி விஸ்மயாவுக்கு பிரணவ் மோகன்லால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.