விவசாயிகளின் மரணத்திற்கு பாஜக அனுதாபம் தெரிவிக்கவில்லை.. ராகுல்காந்தி பேச்சு..

விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது. பலரும் அத்துமீறி டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியை ஏற்றினர். அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குகள் போடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில் கங்கா நகரில் நேற்று(பிப்.12) நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:விவசாயிகள் போராட்டத்தில் இது வரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். இது பற்றி, நாடாளுமன்ற மக்களவையில் நான் பேசும் போது, அந்த விவசாயிகளின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவருமே எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், பாஜக கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. கூட அஞ்சலி செலுத்த முன்வரவில்லை. இது மிகவும் வெட்கக் கேடானது.இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.வெளிநாடுகளில் நடைபெறும் சம்பவங்களுக்கு எல்லாம் கருத்து கூறும் பிரதமர் மோடி, இந்தியாவில் விவசாயிகளின் மரணத்திற்கு ஒரு வார்த்தை கூட ஆறுதல் கூறவே இல்லை என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

More News >>