ராமர் கோயில் நிதிக்கு வரிவிலக்கு.. பாபர்மசூதி நிதிக்கு ஏன் இல்லை? ரவிக்குமார் எம்.பி. கேள்வி.
அயோத்தி ராமர் கோயில் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளித்தது போல், பாபர் மசூதி நன்கொடைக்கு விலக்கு அளிக்காதது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி கட்டுவதற்கு வேறு இடம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜை நடத்தினார். இந்த கோயில் கட்டுவதற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.
அதில் அவர், “ராமர் கோயில் கட்டும் அமைப்புக்கு வருமானவரி சட்டப்பிரிவு 80G ன் கீழ் மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது. அதே அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாபர் மசூதி கட்டுவதில் ஈடுபட்டுள்ள இந்தோ இஸ்லாமிக் கல்ச்சுரல் பவுண்டேஷனுக்கு இன்னும் வருமான வரி விலக்கு அளிக்கவில்லை. இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கான காரணங்களைக் கூறுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.