ராமர்கோயில் கட்டுவதற்கு ரூ.1511 கோடி வசூலானது.. அறக்கட்டளை தகவல்..
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இது வரை ரூ.1511 கோடி நன்கொடை வசூலாகியுள்ளது என்று ராமஜென்மபூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த்தேவ் கிரி தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டது.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜை நடத்தினார்.
உலகம் முழுவதிலும் இருந்து 2000 புனிதமான இடங்களில் இருந்து மண், 100 ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு பூமி பூஜை விழா நடத்தப்பட்டதாக அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ரூ.300 கோடி செலவில் மூன்றரை ஆண்டுகளில் ராமர் கோயிலைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் நிதி வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த நிதியில் மொத்தம் ரூ.1511 கோடி வசூலாகி உள்ளது என்று அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ்கிரி கூறியுள்ளார்.அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை நிதி வசூலில் முறைகேடு நடப்பதாக ஒருதரப்பினர் குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.