ஊற்றிக் கொடுத்த குலம்.. வருத்தம் தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம்..
ஊற்றி கொடுப்பவர் என்று டி.டி.வி. குடும்பத்தைப் பற்றித்தான் சொன்னேன். எந்த சமுதாயத்தையும் பழித்துப் பேசவில்லை என்று சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்கவே மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணித்தரமாகக் கூறியுள்ளார். அதை அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்து பேட்டி அளித்து வந்தார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு படி மேலே போய், சசிகலாவையும், தினகரனையும் கடுமையாக விமர்சித்தார்.
பிப்.11ம் தேதியன்று அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது, சசிகலாவுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். டி.டி.வி.தினகரனிடம் இருந்து அவர் தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சசிகலாவையும் தினகரனையும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது என்று கூறினார். அவர் பேசும் போது, தினகரனை அவன், இவன் என்று ஒருமையில் விளித்துப் பேசினார். கூவத்தூரில் அவன்தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தானா? ஊற்றிக் கொடுப்பதுதான் அவன் குலத்தொழில் என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். அதில், நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என்று கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்து, ஊற்றிக் கொடுப்பதுதான் முக்குலத்தோரின் குலத் தொழில் என்று அந்த சமுதாயத்தைப் பழித்துப் பேசி விட்டதாகக் கூறி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சி.வி.சண்முகம் சாதிச் சண்டையை ஏற்படுத்துகிறார் என்று கூறி, அவரை பதவிநீக்கம் செய்யக் கோரிக்கை விடப்பட்டது. இதற்கிடையே சமூக ஊடகங்களில் சண்முகத்தைக் கடுமையாகத் திட்டி முக்குலத்தோர் தரப்பில் பதிவுகள் இடப்பட்டன.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், டி.டி.வி தினகரன் குறித்து நேற்று நான் பேசிய போது, அவர்களது குலத்தொழில் ஊத்திக் கொடுப்பது என்று பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. நான் பேசியது அந்த தனிப்பட்ட குடும்பத்தினரை மட்டுமே குறிக்கும். ஊத்தி கொடுக்கும் குலம் என்று ஒரு சமுதாயத்தை நான் பழித்துப் பேசியதாகச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டனர். நான் அப்படி எதுவும் பேசவில்லை. நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.