இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ரன் எடுக்கும் முன் முதல் விக்கெட் இழப்பு
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 2வது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமலேயே சுப்மான் கில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவுக்கு முதல் விக்கெட் பறிபோயுள்ளது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த படுதோல்விக்குப் பின்னர் இன்று சென்னையில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
வாஷிங்டன் சுந்தர், ஷஹ்பாஸ் நதீம் மற்றும் பும்ராவுக்கு பதிலாக குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போக்ஸ், மொயின் அலி ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மான் கில்லும் களமிறங்கினர். ஆனால் 2வது ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டோனின் பந்தில் கில் ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்தியா ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே முதல் விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்துள்ளார். நான்காவது ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.