இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி உணவு இடைவேளைக்கு முன்பே 3 விக்கெட்டுகளை இழந்தது
ரன் ஏதும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்த இந்தியாவுக்கு மீண்டும் அடுத்த அதிர்ச்சியாக 21 ரன்களில் புஜாராவும், ரன் ஏதும் எடுக்காமல் கோஹ்லியும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.சென்னை இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே ஒல்லி ஸ்டோனின் பந்தில் சுப்மான் கில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தனர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 47 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்நிலையில் 21 ரன்கள் எடுத்திருந்த போது ஜேக் லீச்சின் பந்தில் புஜாரா ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்தியா 85 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோஹ்லி ஜோடி சேரந்தார்.ஆனால் அதன் பிறகும் இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோஹ்லி வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
இவர் ரன் ஏதும் எடுக்காமலேயே மோயின் அலியின் பந்தில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோஹ்லியும் உடனடியாக ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியா 86 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின்னர் ரோகித் சர்மாவுடன் துணை கேப்டன் அஜிங்கியா ரகானே ஜோடி சேர்ந்தார். 24 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 80 ரன்களுடனும், ரகானே 5 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா எடுத்துள்ள 106 ரன்களில் ரோகித் சர்மா மட்டுமே 80 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.