திரிணாமுல் கட்சியில் அடுத்த தலை உருண்டது.. பாஜகவுக்கு தாவும் எம்.பி.
மேற்கு வங்க திரிணாமுல் எம்.பி. தினேஷ் திரிவேதி, பாஜகவில் சேருகிறார். இதற்காக அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மேற்கு வங்கத்தில் வரும் மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சி மக்களிடம் அதிருப்தியைச் சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே பலமிழந்து விட்டன. பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு விசிட் செய்து அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். அதில் ஒன்றாக திரிணாமுல் கட்சிக்குள் உள்ள முக்கிய தலைவர்களை பாஜகவுக்கு இழுத்து வருகிறார்.திரிணாமுல் கட்சியில் சுவெந்து அதிகாரி உள்பட 2 அமைச்சர்களும், பல எம்.எல்.ஏ.க்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சூழலில், திரிணாமுல் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யான தினேஷ் திரிவேதி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரும் பாஜகவுக்குத் தாவப் போகிறார் என்று தகவல் வெளியானது.
இது பற்றி அவரிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்:பாஜகவில் நான் சேர்ந்தால் அதில் ஒன்றும் தவறில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் எனக்குப் பல ஆண்டுகளாக நண்பர்கள். அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வர வேண்டிய அவசியமே இல்லை. திரிணாமுல் கட்சி தற்போது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது. காங்கிரசைத் தோற்கடித்த போது மம்தா பானர்ஜிக்கு அரசியல் ஆலோசகர் தேவைப்பட்டாரா? திரிணாமுல் கட்சி தொடங்கிய போது, மம்தாவுடன் நான், முகுல்ராய், அஜித்பாஞ்சா போன்றவர்களுக்கு டெல்லி செல்ல விமான டிக்கெட் ரூ.5 ஆயிரம் திரட்டக் கூட முடியாத நிலை இருந்தது. இப்போது ரூ.100 கோடி கொடுத்து கார்ப்பரேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் மம்தா பானர்ஜி. அது தவறில்லை. ஆனால், கட்சியை அவர்கள் நடத்த முடியாது அல்லவா?இவ்வாறு தினேஷ் திரிவேதி பொரிந்து தள்ளினார்.