காதலர் தினத்திற்கு தடை விதிக்க வேண்டும் பஜ்ரங் தளம் கோரிக்கை
காதலர் தினத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெலங்கானாவில் பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது. காதலர்கள் தினத்திற்குப் பதிலாக அந்த நாளை அமர் ஜவான் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமீப வருடங்களாக மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் காதலர்கள் தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாளை பிப்ரவரி 14 என்பதால் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக உலகம் முழுவதும் காதலர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பஜ்ரங் தளம், ஆர்எஸ்எஸ், அனுமன் சேனா உட்பட இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வருடந்தோறும் காதலர் தினத்தில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் மோதல்கள் ஏற்படுவதும் உண்டு. இந்த தினத்தில் கழுதைகளுக்கும், நாய்களுக்கும் செய்து வைப்பது, கடற்கரைகள், பூங்காக்கள் உள்பட இடங்களில் சுற்றித்திரியும் காதலர்களைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது, அவர்களைத் தாக்குவது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த வருடமும் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பல்வேறு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தெலங்கானாவைச் சேர்ந்த பஜ்ரங் தளம் அமைப்பினர் காதலர் தினத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்குப் பதிலாக புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிப்ரவரி 14ம் தேதியை அமர் ஜவான் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காதலர் தினம் என்பது மேற்கத்தியக் கலாச்சாரம் என்றும், இந்தியாவில் குடும்பத்துடன் வாழ்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.