ரோகித் சர்மா அதிரடி சதம் இந்தியா மீண்டு வருகிறது
இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இன்று 130 பந்துகளில் அதிரடியாக ஆடி சதமடித்தார். இவர் 2 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உதவியுடன் சதமடித்தார்.சென்னை டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். ஆனால் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அடுத்தடுத்து பல கடும் அதிர்ச்சிகள் காத்திருந்தன. இந்திய அணி ரன் ஏதும் எடுப்பதற்கு முன் சுப்மான் கில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு புஜாரா களமிறங்கினார். இவர் நன்றாக ஆடிய போதிலும், 21 ரன்களில் ஜேக் லீச்சின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்தியா 85 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் கோஹ்லியும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து 86 ரன்களில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் பறிபோனது இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பிறகு ரோகித் சர்மாவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து போன போதிலும் மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். அவர் 47 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இவர், 130 பந்துகளில் சதமடித்தார். இதில் 2 சிக்சர்களும், 14 பவுண்டரிகளும் அடங்கும். ரகானேவும் ரோகித் சர்மாவுக்கு ஈடுகொடுத்துச் சிறப்பாக ஆடி வருகிறார்.