எதை செய்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல் சூழல் நிலவுகிறது - தமிழிசை

நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் வன் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதே எங்களது முக்கிய நோக்கம். ஆனால் இது போன்ற குற்ற செயல்களை திசை திருப்பி எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறது. இது போன்ற அர்த்தமற்ற அனைத்து சவால்களையும் பாஜக சந்திக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில், உலக நன்மைக்கென ஹோமம் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் ஏப்ரல் 9 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதன் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஸ்ரீ கமலாத்மிகா தேவி சிறப்பு ஹோமத்தில் கலந்துகொள்ள தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை அன்று காமாட்சியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார். அங்குள்ள சாஸ்திரிகள் சிலர் இவரை வரவேற்று "யாக மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். யாகம் முதலியவற்றில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் தமிழிசை பத்திரிக்கையாளர்களிடம் கூறியது:

"தமிழகத்தில் எதை செய்தாலும் மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல் சூழல் நிலவுகிறது. ஆக்கப்பூர்வ அரசியல் மறைந்து எதிர்மறை அரசியல் உருவெடுத்து வருத்தமடைய செய்கிறது.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்மறை கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதும், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க போராட்டங்களை நடத்தி அரசியல் செய்கின்றனர். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், இரு மாநிலங்களையும் அமைதி காக்குமாறு கூறியுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனாலும் போராடுவதற்கு ஏதேனும் காரணம் கிடைக்காதா எனும் வகையில் தான் தமிழக அரசியல் தற்போது உள்ளது.

மேலும், நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை தொடங்கி குற்றம் நிரூபிக்கப்பட கால அவகாசம் வேண்டும். ஆனால், அதற்கு முன்னரே தீர்வு வேண்டும் என்பது முறையல்ல. மேலும் ஆளுநர் மாளிகை நிகழ்வை பற்றி தவறான வதந்திகளை பரப்ப கூடாது. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ளோம். அந்த வகையில் ஆளுநர் மாளிகை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் பத்திரிக்கையாளரிடம் ஆளுநர் நடந்து கொண்ட விதம் நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது.

வயது முதிர்ந்த ஒருவர் தனது குழந்தைகளிடம் நடந்து கொண்டதாகவே இந்நிகழ்வு அமைந்தது. ஒருவர் தன்னிடம் எந்த வகையில் அணுகுகிறார் என்பது அனைவரும் புரிந்துகொள்ள முடியும். ஆகையால், இந்த நிகழ்வை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதே எனது வேண்டுகோள்" என கூறினார் தமிழிசை சௌந்தரராஜன்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>