கவர்னருக்காக தடுப்பு முதல்வருக்கு கடுப்பு
புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். இதையடுத்து முதல்வர் நாராயணசாமியின் கவனத்திற்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து ஆவேசமடைந்த முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநர் மாளிகைக்கு நடந்தே வந்தார். தடுப்புகளை உடனே அகற்ற வேண்டும் என அங்கிருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார் ஆனால் அதைச் சரி செய்யாமல் போலீசார் மௌனமாகவும் நின்று கொண்டிருந்தனர். இதை அடுத்து ஆவேசமடைந்த முதல்வர் நாராயணசாமி உயர் போலீஸ் அதிகாரிகளையும் கலெக்டரும் சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். எதற்காக இந்த தடுப்புகளை இங்கே அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று அவர் கேட்க கவர்னரின் பாதுகாப்பு கருதி இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்காகப் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் வகையிலா அமைப்பது என்று ஆவேசப்பட்டார்.
இதையடுத்து கலெக்டர் மற்றும் ஏ.டி.ஜி.பி உள்ளிட்ட அரசு செயலர்கள் முதல்வரைச் சமாதானம் செய்து தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை அப்புறப்படுத்தாவிட்டால் நானே அப்புறப்படுத்துவேன் என அதிகாரிகளுக்கு நாராயணசாமி எச்சரிக்கை செய்துவிட்டு அங்கிருந்து சென்றார் ஆயினும் உறுதியளித்தபடி அதிகாரிகள் தடுப்புகளை அகற்ற வில்லை.
இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி பொது மக்களின் நலனைக் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் இப்படி அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். பொது முடக்க ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி படிப்படியாக மீண்டும் சகஜநிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகைக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக சுற்றுலாவினர் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றப் பலமுறை கெடு விதித்தும் அதிகாரிகள் அதை அப்புறப்படுத்தவில்லை .இதற்கு மூன்று நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது மூன்று நாட்களில் அந்த தடுப்புகளை அகற்றாவிட்டால் நானே முன் நின்று முன்னிருந்து அதை அகற்றுவேன் என்றார்.