உதயநிதியை எதிர்த்து குஷ்பு போட்டி?
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. திமுக சார்பில் இத்தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் குஷ்புவைக் களமிறக்க பாஜக ஆயத்தமாகி வருகிறது.காங்கிரஸ் கட்சியில் இருந்து மாறி பாஜகவில் இணைந்த குஷ்பு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்குப் பிரச்சார பீரங்கியாக இருப்பார் என்று பாஜக மேலிடம் கருதுகிறது இது ஒருபுறம் இருக்க இந்த தேர்தலில் வேட்பாளராகக் களம் இறங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன அனேகமாக சேப்பாக்கம் தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா. ஜ.க. பொறுப்பாளராக குஷ்பு நேற்று நியமிக்கப்பட்டார்.நியமிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளுடன் குஷ்பு ஆலோசனை நடத்தினார். இன்று தமிழக மேலிடப் பொறுப்பாளரான சிடி ரவி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குஷ்புவும் இதில் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய சிடி ரவி, மத்திய அரசிடமிருந்து அதிகம் நிதி கேட்டுப் பெற்றிருப்பது தமிழ்நாடு தான். எனினும் பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எம்.எல்.ஏ கிடையாது. ஒரு எம்.பி கிடையாது என்றவர் குஷ்புவுக்கு வாக்களிக்க நீங்கள் தயாரா என்று கேட்டார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்புவிடம் ரவியின் பேச்சை மேற்கோள்காட்டி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, சிடி ரவி குறுக்கிட்டு குஷ்புவுக்கு வாக்களிக்கத் தயாரா என்றால் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கத் தயாரா என்றுதான் அர்த்தம் என்று புது விளக்கம் கொடுத்தவர் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய குஷ்பு, தி.மு.கவின் தொகுதி என்று சொல்லப்படும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வரவிருக்கும் தேர்தலில் திமுகவே அசந்து போகும் அளவுக்கு பாஜக வெற்றி பெறும் என்றார் . சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தி.மு.க வெற்றி பெறும் தொகுதியாகும். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகன் இத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த தொகுதியில் தான் போட்டியிடுவார் என திமுகவினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அப்படி ஒரு நிலை வரும் பட்சத்தில் பாஜக சார்பில் குதூகலம் இருக்கலாம் என்பது தான் இப்போதைய ஹாட் டாக் .