இந்தியா 329 ரன்களில் ஆல்-அவுட் இங்கிலாந்துக்கும் தொடக்கத்திலேயே அதிர்ச்சி
இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்துக்கும் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே ரன் எடுப்பதற்குள் இங்கிலாந்துக்கு முதல் விக்கெட் பறிபோனது சென்னையில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. சுப்மான் கில் மற்றும் கேப்டன் கோஹ்லி ஆகியோர் ரன் எடுக்காமலும், புஜாரா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 86 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இதன்பிறகு ரோகித் சர்மாவுடன் துணை கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். ரோகித் சர்மா சதமும், ரகானே அரை சதமும் அடித்தனர். இறுதியில் ரோகித் சர்மா 161 ரன்களிலும், ரகானே 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தனர். தொடர்ந்து களமிறங்கிய அஷ்வின் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 33 ரன்களும், அக்சர் படேல் 5 ரன்களும் எடுத்திருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கிய உடன் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அக்சர் படேல் அதே 5 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், முகமது சிராஜ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து இந்தியா 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரிஷப் பந்த் கடைசி வரை 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது. தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது இஷாந்த் ஷர்மா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்தியாவைப் போலவே இங்கிலாந்துக்கும் தொடக்கம் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இங்கிலாந்தும் ரன் ஏதும் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்துள்ளது.