இந்தி மயமானது ஈரோடு ரயில் நிலையம்..
ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஆங்கிலம் மற்றும் தமிழில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. வாகனநிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகள் குறித்த அறிவிப்பு பலகை, கழிப்பறைகள், ஆட்டோ நிறுத்தம், முன்பதிவு அலுவலகம், பொருட்கள் வைப்ப றை உள்ளிட்ட எல்லா அறிவிப்பு பலகைகளும் தற்போது புதிப்பிக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
ஈரோடு ரயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக ரயில் நிலையம் புதுப்பொலிவு செய்யப்பட்டு அறிவிப்பு பலகைகள் அனைத்தும் மாற்றப்பட்டன. இப்படி மாற்றப்படும் போது தான் இந்தி மொழியில் அறிவிப்புகளை எழுதி புதிய அறிவிப்பு பலகைகளை அமைத்துள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் உத்தரவின் படியே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ள நிலையில் இந்த இந்தி திணிப்பிற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் இந்தி மொழி தெரிந்தவர்கள் குறைந்த அளவே உள்ளனர். சொல்லப்போனால் மலையாள மொழி பேசுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அப்படியிருக்க மலையாள மொழியிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே இந்தி மொழியில் மட்டும் அறிவிக்கப்பட்டிருப்பது கட்டாய இந்தித் திணிப்பை காட்டுகிறது. எனவே இந்தி வாசகங்களை அகற்றி விட்டு ஏற்கனவே இருந்தது போல், தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்பு பலகைகளை வைக்கவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்...