தள்ளாட்டத்தில் இங்கிலாந்து தேநீர் இடைவேளையின் போது 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள்
இங்கிலாந்து அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய தரப்பில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 161 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்தபடியாக அஜிங்கியா ரகானே 67 ரன்களும், ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியில் வேறு எந்த வீரர்களும் சிறப்பாக ஆடவில்லை. இங்கிலாந்து தரப்பில் மோயின் அலி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பிறகு இன்று இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவைப் போலவே இங்கிலாந்தும் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே முதல் விக்கெட்டை இழந்தது. இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் சிப்லி 16 ரன்களிலும், முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய கேப்டன் ஜோ ரூட் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 52 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. அஷ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவராக பெவிலியன் திரும்பினர். தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது. பென் போக்ஸ் 23 ரன்களில் ஆடிக் கொண்டிருக்கிறார். இந்திய தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.