ஆதரவற்றோர் காப்பகத்தில் அசத்தலாய் காதலர் தின விழா..

முதியோரை காதலிப்போம் என்ற தலைப்பில் ஈரோட்டில் ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில்,வித்தியாசமான முறையில் காதலர் தின விழா கொண்டாடப்பட்டது. அட்சயம் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பினர் இந்த காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு காதலர் தின நினைவு பரிசான ரோஜா மலர்களை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதியவர்களிடத்தும், ஆதரவற்றோரிடத்தும் அன்பு செலுத்தி ஆதரிக்கவும், யாசகர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கவும் இந்த நிகழ்ச்சியில் அவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். குடும்ப உறுப்பினர்களிடம், முதியவர்களிடம் மனம் விட்டு பேசி அவர்களை காதலிப்போம், அன்பு செலுத்துவோம் என்பதை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக பேரணி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு முதலில் அனுமதி வழங்கி இருந்த காவல்துறை திடீரென அனுமதியை மறுத்து தடை விதித்தது. காதலர் தின ஆதரவு, எதிர்ப்பு என எந்த நிகழ்ச்சிகளையும் பொது இடங்களில் நடத்த அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் அனுமதி மறுத்ததால் காப்பக வளாகத்திலேயே நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். உறவுகளை இழந்து காப்பகத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு இந்த காதலர் தின நிகழ்ச்சி ஆறுதலையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது...

More News >>