உலகின் இரண்டாவது பெரிய ஆலமரத்துக்கு தீவிர சிகிச்சை!

தெலங்கானா மாநிலத்தின் மெஹபூப்நகர் மாவட்டத்தில் ஒரு பிரமாண்டமான ஆலமரம் உள்ளது. ஏறக்குறைய மூன்று ஏக்கர் பரப்பில் படர்ந்துள்ள இந்த ஆலமரத்தின் வயது 700 ஆண்டுகள்.

இது உலக அளவில் இரண்டாவது பெரிய ஆலமரம் என்று கூறப்படுகிறது. 'பில்லலமர்ரி' அல்லது 'பீர்லமர்ரி' என்று அழைக்கப்படும் இந்த ஆலமரம் புகழ்பெற்ற சுற்றுலாதலமாக விளங்குகிறது.

இந்த மரத்தின் கிளையொன்று பூச்சி மற்றும் கரையான்களால் அரிக்கப்பட்டது. பாதிப்படைந்த அந்தக் கிளை முறிந்தபோது, அந்த ஆலமரம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆலமரத்தின் அருகே வர பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரையான்களை அழிக்கக்கூடிய குளோப்ரிபாஸ் என்ற மருந்தை தண்ணீரில் கரைத்து, மரத்தின் கிளைகளில் ஓட்டைகளை போட்டு உள்ளே செலுத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால், மருந்து கிளைகளுக்குள் செல்லாததால், நீரில் கரைக்கப்பட்ட மருந்தை, மருத்துவமனையில் மனிதர்களுக்கு குளூக்கோஸ் ஏற்றுவதுபோன்று ஆலமரத்துக்குள் செலுத்துகின்றனர். இரண்டு அடி தூரத்திற்கு ஓரிடத்தில் மருந்து செலுத்தப்படுகிறது. மருந்து கரைக்கப்பட்ட நீர், வேர்களுக்கும் பாய்ச்சப்படுகிறது.

இந்த மரம் தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாகவும், மரம் விழுந்து விடாமல் காங்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மாவட்ட வன அதிகாரி சுக்கா கங்கா ரெட்டி, மாவட்ட ஆட்சியர் ரொனால்டு ரோஸின் நேரடி மேற்பார்வையில் இந்த மரம் பராமரிக்கப்படுவதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>