இங்கிலாந்து 134 ரன்களில் ஆல்-அவுட் அஷ்வினுக்கு 5 விக்கெட்டுகள் இந்தியா மீண்டும் பேட்டிங்
இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்தியாவை விட இங்கிலாந்து 195 ரன்கள் பின்தங்கியுள்ளது. தொடர்ந்து இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய தரப்பில் ரோகித் சர்மா, அஜிங்கியா ரகானே மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக ஆடினர். ரோகித் சர்மா 161 ரன்களிலும், அஜிங்கியா ரகானே 67 ரன்களிலும், ரிஷப் பந்த் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பந்த் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மோயின் அலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியைப் போலவே இங்கிலாந்துக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
சிப்லி 16 ரன்களிலும், கேப்டன் ஜோ ரூட் 6 ரன்களிலும், டேன் லாரன்ஸ் 9 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 18 ரன்களிலும், ஒல்லி போப் 22 ரன்களிலும், மோயின் அலி 6 ரன்களிலும், ஜேக் லீச் 5 ரன்களிலும், பிராட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் அஷ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இஷாந்த் ஷர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.