நில மோசடி புகார் குறித்து பாராமுகம் தொழிலாளி தற்கொலை : மரண வாக்குமூல வீடியோவால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ரூபாய் 2 லட்ச ரூபாய் கடனுக்காக அடகு வைத்த நிலத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்திய பிறகும் நிலத்தை திருப்பி தராமல் மோசடி செய்தவரிடமிருந்து மீட்டு தருமாறு எஸ்.பி.யிடம் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார் இறப்பதற்கு முன் அது குறித்து மரண வாக்குமூலமாக அவர் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ் (34).

இவரது தந்தை கிறிஸ்டோபர் அதே கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான மரிய ஜோசப் என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன் தனது நிலத்தை அடமானம் வைத்து இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். 8 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்டோபர் இறந்துவிட்ட நிலையில் தந்தை பெற்ற கடனை அவரது மகனான ஜேசுதாஸ் வருடம் ரூ.1 லட்சம் என வட்டியுடன் என்ற கணக்கில் மரிய ஜோசப்யிடம் கொடுத்து கடனை முழுமையாக அடைத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட மரிய ஜோசப் நிலத்தை திருப்பி தர மறுத்ததுடன் மேலும் ரூபாய் 19 லட்சம் கொடுத்தால்தான் நிலத்தை திரும்ப தருவேன் என்று சொன்னாராம். இது குறித்து ஜேசுதாஸ் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பெரம்பலூர் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நேரில் நிலத்தை மீட்டு தர கோரி புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இருந்தரப்பும் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரத்தி அடைந்த ஜேசுதாஸ் கடந்த 7 ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார், திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே இறக்கும் தருவாயில் இருந்த ஜேசுதாஸ் கொடுத்த மரண வாக்கு மூலத்தில், நில மோசடியால் ஏமாற்றப்பட்ட விரத்தியும் காவல்துறை, மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததாலும் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உரிய நீதி கிடைக்கும் வரை சடலத்தை அடக்கம் செய்ய போவதில்லை என்று கூறி சடலத்தை நடுரோட்டில் வைத்து வைத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More News >>