சென்னை டெஸ்ட் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் 249 ரன்கள் முன்னிலை

சென்னை டெஸ்ட் போட்டியில் 2வது நாளில் இன்று இந்தியா ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்தியா 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் விளையாடிய இந்தியா 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இதனால் 134 ரன்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 195 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த அணியில் விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஜோ ரூட் உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இஷாந்த் ஷர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகம்மது சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்பின்னர் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடினர். ஆனால் கில் 14 ரன்களில் ஜேக் லீச்சின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இன்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது இந்தியா 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

More News >>