கல்குவாரி குளத்தில் கன்னியாஸ்திரியின் உடல் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்
கேரள மாநிலம் கொச்சியில் கல்குவாரி குளத்தில் 44 வயதான கன்னியாஸ்திரியின் உடல் மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது சாவில் மர்மம் இருப்பதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கீரித்தோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் ஜெசீனா (44). கன்னியாஸ்திரியான இவர், கொச்சி காக்கநாடு அருகே உள்ள வாழக்காலா என்ற இடத்தில் உள்ள செயின்ட் தாமஸ் கன்னியாஸ்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தான் ஜெசீனா இந்த ஆசிரமத்திற்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று இவரை மதிய உணவு சாப்பிட அழைப்பதற்காக அங்கு இருந்த ஒரு கன்னியாஸ்திரி சென்றுள்ளார். ஆனால் அறையில் அவரைக் காணவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆசிரமத்தின் பின்புறம் ஒரு பழைய கல்குவாரி குளம் உள்ளது. மாலையில் அங்கு சென்று தேடிய போது கன்னியாஸ்திரி ஜெசினாவின் உடல் மிதப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசாரும், தீயணைப்பு படையினரும் சேர்ந்து கன்னியாஸ்திரியின் உடலைக் குளத்திலிருந்து மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கொச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாஸ்திரி ஜெசினாவுக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாகவும், கடந்த 2011ம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் மனநிலை பாதிப்பு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கன்னியாஸ்திரியின் உறவினர்கள் தெரிவித்தனர்.
ஒரு நாள் முன்பு கூட தங்களுக்கு போன் செய்ததாகவும், அப்போது எந்த பிரச்சினையும் அவருக்கு இல்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். நேற்று காலையில் ஆசிரமத்திற்கு போன் செய்த போது, ஜெசீனா பிரார்த்தனைக்குச் சென்றிருப்பதாக ஆசிரமத்தில் இருந்தவர்கள் கூறியதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.