மாங்காய் கழுவ சென்ற போது பரிதாபம் அண்ணன், தம்பி 3 பேர் குளத்தில் மூழ்கி பலி

தோட்டத்தில் விழுந்து கிடந்த மாங்காயை கழுவுவதற்காகச் சென்ற அண்ணன், தம்பி மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்தது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குனிசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜசீர். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ஜின்ஷாத் (12), ரின்ஷாத் (7), ரிபாஸ் (3) என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த 2 பேர் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர். ஜின்ஷாத் ஏழாம் வகுப்பிலும், ரின்ஷாத் மூன்றாம் வகுப்பிலும் படித்து வந்தனர். இவர்களது வீட்டுக்கு அருகே ஒரு குளம் உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் நல்ல மழை பெய்ததால் குளத்தில் தண்ணீர் கூடுதலாக இருந்தது. அந்தக் குளத்தை ஒட்டி ஏராளமான மா மரங்கள் உள்ளன. இவர்கள் மூன்று பேரும், அப்பகுதியைச் சேர்ந்த உறவினரான ஒரு சிறுமியும் தோட்டத்திற்கு விளையாடுவதாகச் சென்றனர். அப்போது மரத்தில் இருந்து மாங்காய்கள் கீழே விழுந்து கிடந்தன. அந்த மாங்காய்களைச் சேகரித்த அவர்கள் அதைக் கழுவுவதற்காகக் குளத்திற்குச் சென்றனர்.ஒரு பாறையின் மேல் அமர்ந்து கொண்டு ரின்ஷாத் மாங்காய்களை கழுவிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தான். இதைப் பார்த்த 3 வயது சிறுவன் ரிபாஸ், அண்ணனைக் காப்பாற்ற முயன்றான்.

ஆனால் அந்த சிறுவனும் குளத்தில் விழுந்தான். இதைப் பார்த்த ரின்ஷாத் இருவரையும் காப்பாற்றுவதற்காகக் குளத்தில் குதித்தான். ஆனால் அவனும் குளத்தில் மூழ்கினான். இவர்கள் 3 பேரும் தண்ணீர் மூழ்குவதை பார்த்த அங்கிருந்த சிறுமி வீட்டிற்கு ஓடிச் சென்று விவரத்தை கூறினாள். இதையடுத்து வீட்டிலிருந்த ஜசீர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று மூன்று பேரையும் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி 3 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>