சட்டசபைத் தேர்தல்.. அதிமுகவில் பிப்.24 முதல் விருப்பமனு பெறலாம்..
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலம் வரும் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் இறுதி வாரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு, அவர் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தேர்தல் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதே போல், அதிமுகவுக்குள் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மறைமுகமாக பனிப்போர் நடைபெற்று வருகிறது. ஆனாலும், இருவரும் ஒற்றுமையாக உள்ளது போல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இருவரும் இணைந்தே அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இருவரும் கூட்டாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தல், புதுச்சேரி, கேரள சட்டசபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இவற்றில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்.24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். தமிழ்நாடு தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.15 ஆயிரம், புதுச்சேரி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.5 ஆயிரம், கேரள தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.