2 பேரின் வளர்ச்சிக்காக மக்களிடம் கொள்ளை.. ராகுல்காந்தி ட்வீட்
சமையல் எரிவாயு(கேஸ் சிலிண்டர்) விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் வரி உயர்வுகளால், இவற்றின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 7 நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து லிட்டர் விலை ரூ.100 தொட்டுள்ளது. அதே போல், சமையல் எரிவாயு(கேஸ்) விலையும் கடந்த டிசம்பர் முதல் இது வரை 3 முறை உயர்ந்துள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.769 ஆகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதில் அவர், இரண்டு பேரின்(அம்பானி, அதானி) வளர்ச்சிக்காக மக்களிடம் கொள்ளை அடிப்பதா? என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் சிலிண்டர் விலை உயர்வு பத்திரிகைச் செய்திகளை அதில் இணைத்துள்ளார்.