வலிமை அப்டேட்: ரசிகர்களுக்கு அஜீத் பதில்.. கண்ணியம் கட்டுப்பாடு முக்கியம்..

தல நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப் பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமானது. அத்துடன் படம் நின்றது. ஊரடங்கு தளர்வில் படப் பிடிப்புக்கு அரசு அனுமதி கொடுத்ததும் பிறபடங்கள் தொடங்கிய நிலையில் வலிமை படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருப்பில் இருந்தது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது அஜீத் கலந்துகொண்டு நடித்தார். இப்படத்தைச் சிவா இயக்கி வருகிறார்.

இதில் ஹீரோயினாக ஹூமா குரோஷி நடிக்கிறார். இவர் காலா படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்த பாலிவுட் நடிகை. மீண்டும் வலிமை படம் மூலம் தமிழில் நடிக்கிறார்.வலிமை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் அஜீத் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் அஜீத்துக்குக் காலில் அடிபட்டது. அதற்குச் சிகிச்சை பெற்றுக் கொண்டு உடனே அந்த காட்சியை முடித்துக் கொடுத்தார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கியது.

கடந்த ஒரு வருடமாகவே அஜீத் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். தயாரிப்பாளர் தரப்பில் சரியான பதில் கிடைக்கவில்லை. கடந்த 2மாதத்துக்கு முன் வலிமை அப்டேட் கேட்டு மீண்டும் ரசிகர்கள் மெசேஜ் பகிர்ந்த வண்ணம் இருந்தனர்.அப்போது தயாரிப்பாளர் தரப்பில் தகுந்த நேரத்தில் அப்டேட் வெளியிடப்படும் என்று ரசிகர்களுக்குச் சமாதானம் சொல்லப்பட்டது. தற்போது ரசிகர்கள் பொறுமை இழந்து அமைச்சர்களிடம் வலிமை அப்டேட் கேட்கத் தொடங்கிப் படக் குழுவுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது அஜீத்குமாருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து அஜீத்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் "வலிமை" சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும்.உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையைக் கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News >>