இலங்கை, நேபாளத்திலும் பாஜக ஆட்சி?: திரிபுரா முதல்வர் உரையால் பரபரப்பு!
இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி இலங்கை, நேபாளத்திலும் பாஜக ஆட்சியமைக்க விரும்புவதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில முதல்வரும், மாநில பாஜக மூத்த தலைவருமான பிப்லாப் தேப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, பேசிய பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாக தெரிவித்தார்.
தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜக தேசிய தலைவராக இருந்தபோது அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அமித்ஷா இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார் என்றும் பிப்லாப் தேப் கூறினார்.
முதல்வர் பிப்லாப் தேப்பின் இந்த பேச்சு மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக பேசிய மாநில முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க திரிபுரா எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.