உங்கள் தரம் இதுதான் பாஜக தலைமை வெட்கப்பட வேண்டும் - எச்.ராஜாவை சாடும் சரத்குமார்
கட்சியின் தலைமை எச்.ரஜாவை கண்டிக்காவிட்டால், உங்கள் அரசியல் களமும், தரமும் அவ்வாறுதான் உள்ளது என்று மக்கள் முடிவு செய்துவிடுவார்கள் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், “மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் தமிழக முகம் எச்.ராஜாவாக இருந்தால், அவர் சமீபத்தில் பதிவிட்டிருக்கும் கருத்து, அவர் தலைமைக்கு ஒப்புதல் என்றால், நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
நமது நாட்டை ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களின் தரம் இதுவென்றால், இந்த ஆட்சியை தேர்ந்தெடுத்த நாம்தான் மாபெரும் தவறு இழைத்திருக்கிறோம்.
அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மட்டுமே பேசி, முரணான கருத்துகளைப் பதிவு செய்து, நாட்டின் முக்கிய பிரச்சினைகளை திசை திருப்ப அந்த கட்சி முயற்சிக்கிறதா?
பொதுவாழ்வில் இருக்கும் அனைவரையும் பற்றி இப்படி தேவையற்ற, அநாகரிகமான பதிவுகளைத் தொடர்ந்து செய்துவரும் ஹெச் ராஜா, முதலில் தனது கட்சியில் இருக்கும் தலைவர்களை பற்றி எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு பதில் சொல்லத் தயாராக இருக்கிறாரா? முதலில் டெல்லியில் இருக்கும் தலைவர்களிடம் தொடங்கி விவாதம் வைக்க தயாராக இருக்கிறாரா?
நாளுக்கு நாள் அவரது அநாகரிக அரசியல் பேச்சுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற அருவருக்கத்தக்க மூன்றாம் தர கருத்துகளை அவர் உடனடியாக நிறுத்தாவிட்டால், கட்சியின் தலைமை அவரை கண்டிக்காவிட்டால், உங்கள் அரசியல் களமும், தரமும் அவ்வாறுதான் உள்ளது என்று மக்கள் முடிவு செய்துவிடுவார்கள். பெண் இனத்தை இழிவுப்படுத்திய ஒருவர் உங்களுடன் அரசியல் களத்தில் இருப்பது பாஜக தலைமைக்கு தகுதி தானா?
பாஜகவின் தமிழக தலைவரே ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில், பெண் இனத்தை பற்றிய அவரின் அநாகரிகமான பதிவிற்கு பாஜக தலைமை வெட்கப்பட வேண்டும். இவரின் பதிவால் பாஜக தலைமைக்கே தலைகுனிவாகும்” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com