2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தம்பதி தூக்கு போட்டு தற்கொலை
இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று கணவன், மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டிவிளை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (43). இவர் தச்சுத் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (37). இவர்களுக்கு அனுஷ்கா (10) என்ற மகளும், விவாஸ் (4) என்ற மகனும் இருந்தனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் இவர்கள் குடும்பத்துடன் ஈத்தாமொழி அருகே உள்ள கண்டபற்றி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை இவர்களது வீடு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் கதவைத் தட்டிய போதிலும் யாரும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது நான்கு பேரும் இறந்த நிலையில் காணப்பட்டனர். கண்ணனும், சரஸ்வதியும் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் இருவரும் படுக்கையில் இறந்த நிலையிலும் காணப்பட்டனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் வீட்டுக்குள் தற்கொலைக்கு முன்பு கண்ணன் எழுதிய ஒரு கடிதம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மகன் விவாசுக்கு கடந்த சில வருடங்களாக வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும், பல டாக்டர்களிடம் காண்பித்தும் நோயை குணப்படுத்த முடியாமல் தவித்து வந்ததாகவும் எழுதப்பட்டிருந்தது. அடிக்கடி வலியால் மகன் துடிப்பதை சகித்துக் கொள்ள முடியாததால் குழந்தைகளை கொன்று விட்டு தாங்களும் தற்கொலை செய்து கொள்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கண்ணனும், சரஸ்வதியும் சேர்ந்து குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து பின்னர் இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சரஸ்வதி முதலில் தூக்கு போட்டுள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னரே கண்ணன் தூக்கு போட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.