5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை

5ம் வகுப்பு மாணவியைப் பலமுறை பள்ளியில் வைத்து பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பள்ளி முதல்வருக்கு பாட்னா நீதிமன்றம் மரண தண்டனையும், 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவர் அப்பகுதியில் நியூ சென்ட்ரல் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். அப்பள்ளியில் கடந்த 3 வருடங்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளியின் 11 வயது மகள் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த மாணவியை முதல்வர் அரவிந்த் குமார் பல முறை தன்னுடைய அறையில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் அபிஷேக் குமார் என்பவர் உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த போது அந்த மாணவி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அந்த மாணவியிடம் டாக்டர்கள் விசாரித்த போது தான் பள்ளி முதல்வர் அரவிந்த் குமார் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பள்ளி முதல்வர் அரவிந்த் குமாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் அபிஷேக் குமாரையும் கைது செய்தனர். இந்த வழக்கு பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவதேஷ் குமார், பள்ளி முதல்வர் அரவிந்த் குமாருக்கு மரண தண்டனையும், 15 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் அரவிந்த் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கின் தன்மையைப் பரிசோதித்த போது குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனையை விடக் குறைந்த தண்டனை வழங்க முடியாது என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்தார். இதற்கிடையே வழக்கு விசாரணையின் கட்டத்தில் அந்த சிறுமிக்குக் கருக்கலைப்பு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

More News >>