கழிப்பறை இல்லாததால் குஜராத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு!
காந்திநகர்: குஜராத்தில் வீட்டில் பாத்ரூம் கட்டாத காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21-ம் தேதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, குஜராத் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வீட்டில் கழிப்பறை உள்ளது என்பதற்கான ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் சிங்கர்வா பஞ்சாயத்து தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் 47 வயதான கிரினா படேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், கிரினா படேல் தனது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என பாஜகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். பாஜக புகாரையடுத்து கிரினா படேல் வீட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள், அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, பஞ்சாயத்து தொகுதிக்கு போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை மாநில தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதில், ஹைலைட் என்னவென்றால், தனது வேட்புமனுவில் கிரினா படேல், ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், நரோடாவில் ஒரு பிளாட் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் இருப்பதாக தெரிவித்ததுதான். கழிப்பறை வசதி கூட இல்லாத காங்கிரஸ் வேட்பாளர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை மனு நிராகரிக்கப்பட்டது செய்தி தேசியளவில் வைரலாகியுள்ளது.