இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறதா டெஸ்லா?!
உலகளவில் புகழ்பெற்ற எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சீனாவுக்கு அடுத்து மிகப்பெரிய சந்தையாக இந்தியா கருதப்படுகிறது. இதற்கு ஏற்ப புதிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கார் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கார்களை அறிமுகம் செய்யவும் உற்பத்தி ஆலையை அமைக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கு ஏற்ப, கடந்த ஆண்டு (2020) உலகளவில் புகழ்பெற்ற எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், அடுத்த ஆண்டு (20201)இந்தியாவில் செயல்பாட்டினைத் தொடங்குவோம் என தெரிவித்திருத்தது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டெஸ்லா நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் எடியூராப்பா கூறுகையில், பெங்களூருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார சிறப்பு மண்டலத்தில் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக உற்பத்தி கூடத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், டெஸ்லா நிறுவனம் எந்தவித தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் 5 மாநிலங்களில் ஷோரூம் அமைக்கவும், ரிசர்ச் மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் உற்பத்தி கூடம் அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டெஸ்லா கடந்த மாதம் தெரிவித்திருந்தது. அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, டெஸ்லா தனது உற்பத்தியை அடுத்து சில மாதங்களில் தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. CKD ரூட்டில் டெஸ்லா மாடல் 3 காரின் பாகங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.