பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவது ஏன்? எப்படி சரி செய்யலாம்?
பொதுவாக பெண்கள் ஊட்டச்சத்து குறைவினால் அவதிப்படுகிறார்கள். பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவதற்கு, சரியான உணவு பழக்கம் இன்மை, நேரம் தவறி சாப்பிடுதல், உணவை பற்றி போதுமான புரிதல் இன்மை, உயிரியல் காரணங்கள் மற்றும் சமுதாய செல்வாக்கு ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. சரியான உணவை சாப்பிடாததால் நோய்த் தொற்று மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளுக்கு பெண்கள் உள்ளாகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சில குறைபாடுகளையும் அவற்றை போக்கும் வழிகளையும் காணலாம்.
இரும்புச் சத்து குறைபாடுபெண்களுக்கு, கருத்தரிக்கக்கூடிய காலத்தில் காணப்படக்கூடியது இரும்புச் சத்து குறைபாடாகும். போதுமான அளவு இரும்புச் சத்து உடலில் சேராவிட்டால் மாதவிடாய் கோளாறுகள் உண்டாகும். அசதி, சருமம் வெளிறுதல், மனதில் எரிச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இரும்புச் சத்து குறைபாட்டினை போக்குவதற்கு இரும்புச் சத்து அதிகமான முருங்கைக் கீரை, பேரீச்சை, கடலைமிட்டாய், எள், அத்திப்பழம், மீன், முட்டை, பாதாம், முந்திரி, மாம்பழம், அன்னாசிப்பழம், பப்பாளி பழம் ஆகியவற்றை சாப்பிடவேண்டும்.
வைட்டமின் டி குறைபாடுபெண்களுக்கு ஏற்படும் குறைபாட்டில் பொதுவான ஒன்று வைட்டமின் டி குறைபாடாகும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையாமல் இருப்பதற்கு வைட்டமின் டி அவசியம். எலும்பு ஆரோக்கியத்திற்கும் இது தேவை. வைட்டமின் டி உடலில் குறையும்போது, உணவில் இருந்து தேவையான சுண்ணாம்புச் சத்து உறிஞ்சப்படுவதில்லை. ஆகவே, எலும்புகள் பலவீனமடைகின்றன. முட்டை, பால், மீன், காளான் போன்ற உணவுகளை சாப்பிட்டால் இக்குறைபாட்டை போக்கலாம். தினமும் காலை நேரத்தில் 10 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில்படும்படி நடந்தாலும் வைட்டமின் டி குறைபாட்டை போக்கலாம்.
அயோடின் குறைபாடுஅயோடின் சத்து குறைவுபடும்போது தைராய்டு மற்றும் ஹார்மோன் செயல்பட்டால் குழப்பம் நேருகிறது. பெண் பிள்ளைகளின் வளர்ச்சியை இது பாதிக்கிறது. பால் பொருள்கள், முட்டை, அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு ஆகியவற்றை சாப்பிட்டால் அயோடின் குறைபாட்டை போக்கலாம்.
சுண்ணாம்புச் சத்து குறைபாடுஉடலின் வளர்ச்சிக்கும், எலும்பின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) அவசியம். முதிய பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு தேயும் பாதிப்பை உருவாக்குகிறது. ஆகவே பெண்கள் பால், மீன் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும்.
புரதச் சத்து குறைபாடுதசைகளை கட்டமைக்கக்கூடியது புரதம் ஆகும். புரதம் குறைவாக உடலில் சேர்ந்தால் அநேக ஆரோக்கிய பிரச்னைகள் உருவாகும். ஒவ்வொருவருக்கும் உடல் எடையில் ஒரு கிலோகிராமுக்கு 0.8 முதல் 0.10 கிராம் புரதம் தேவை. பயிறுகள், முட்டை, தயிர், கோழியிறைச்சி, மீன், நட்ஸ் (கொட்டைவகைகள்), விதைகள் (சீட்ஸ்) ஆகியவற்றில் புரதம் அதிகம் உள்ளதால் அவற்றை சாப்பிடவேண்டும்.
மெக்னீசியம் குறைபாடுஉடலின் தசைகள் சுருங்கவும் தளரவும் தேவையானது மெக்னீசியம். இந்த ஊட்டச்சத்தும் பெண்களுக்கு குறைபடுகிறது. கருவுறுதல் பிரச்னை கொண்டவர்களுக்கு மெக்னீசியம் குறைபாடும் காரணமாக இருக்கக்கூடும். எள், பூசணி, சூரியகாந்தி விதை, சோயாபீன்ஸ் உள்ளிட்ட பீன்ஸ் வகைகள், நட்ஸ் (கொட்டை வகைகள்)இவற்றை அதிகம் சாப்பிட்டால் மெக்னீசியம் குறைபாட்டை தவிர்க்கலாம்.
வைட்டமின் பி12 குறைபாடுஇரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் நரம்பியல் செயல்பாடுகளுக்கு உதவும் சத்து வைட்டமின் பி12 ஆகும். இது குறையும்போது உடல் ஆரோக்கியம் கெடுகிறது. மீன், முட்டை, ஈரல், பால், தோல் நீக்கப்படாத சிவப்பரிசி இவற்றை அதிகமாக சாப்பிட்டால் வைட்டமின் பி12 கிடைக்கும்.